நெல் பறிமுதல் என்னும் போர்வையில் அரசாங்கம் வட கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்கின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரனை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
அதனை தொடர்ந்து என்னோடு கலந்துரையாடினார்கள் இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பரம்பரை பரம்பரையாக தாங்கள் விவசாயம் செய்துவரும் நிலையில் நெல்லையும் சேமித்து அதனை உரிய காலத்தில் பயன்படுத்திவரும் நிலையில் இன்று அந்த நெல்லை பறிமுதல் செய்யும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்துவருவதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
அறுவடை செய்யும் நெல்லை உடனடியாக உரிய விலைக்கு விற்பனை செய்யமுடியாத காரணத்தினாலும் அடுத்த விவசாய செய்கைக்கு தேவையான முளைநெல்லுக்காகவும் நெல் சேமித்துவைக்கப்படுவதாகவும் உரிய காலத்தில் நல்ல விலை கிடைக்கும்போது அவை விற்பனை செய்யவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இன்று அவ்வாறு நெல்லை வைக்கமுடியாது என விவசாயிகளின் களஞ்சியங்களை முற்றுகையிடும் நுகர்வோர் அதிகார சபையினரால் அவை சீல் வைக்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
காலம்காலமாக அறுவடைசெய்யும் நெல்லை களஞ்சியப்படுத்தி வைத்து விதைப்பு நடவடிக்கைகளுக்கு பின்னரே குறித்த நெல்லை விற்பனை செய்வதாகவும் தாங்கள் நெல்லை வியாபார நோக்கில் வாங்கி களஞ்சியப்படுத்தவில்லையெனவும் தங்களது உழைப்பினால் கிடைத்தவற்றையே சேமித்துவைத்திருந்ததாகவும் விவசாயிகள் இதன்போது தெரிவித்தனர்.
பாரியளவிலான நெல்லை பதுக்கிவைத்திருக்கும் முதலாளிகளை விட்டுவிட்டு விவசாயிகள் சேமித்துவைத்துள்ள நெல்லை பறிமுதல் செய்யும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், சில தினங்களுக்கு முன்பாக இந்த மாவட்டத்தில் நெல் தொடர்பில் விவசாயிகள் முகங்கொடுக்கவுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பேசியிருந்தேன்.நான் கூறிய விடயங்கள் இன்று நடைபெற்றுவருகின்றன. சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் வைத்திருக்கும் இடங்களை நுகர்வோர் அதிகார சபையினர் சீல் வைப்பது தொடர்பில் நான் கூறியிருந்தேன்.இன்று அது விவசாயிகளை பாரியளவில் பாதிக்கும் வகையில் வந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மக்கள் விவசாயத்தினை நம்பி வாழும் மக்கள்.இந்த மாவட்டம் விவசாயத்தினையும் மீன்பிடியையும் மையமாக வைத்து மக்கள் வாழும் மாவட்டம்.இந்த மாவட்டத்தில் முயற்சியாளர்களாக இந்த விவசாயிகள் இருந்துவருகின்றனர்.
ஒரு மாவட்டத்தின் அபிவிருத்திக்குள் அந்த மாவட்டத்தின் பொருளாதாரமும் வரும்.இன்று இலங்கை அரசாங்கம் தனது நிர்வாகத்தினை சரியான முறையில் செய்யாமல் தனது வேலைத்திட்டங்களை பொறுப்பற்ற வகையில் செய்து இலங்கை பொருளாதாரத்தினை முற்றாக அழித்துக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினையும் அழிக்கும் ஒரு செயற்பாட்டினை ஆரம்பித்துள்ளனர்.
இதைப்பற்றியெல்லாம் கதைப்பதற்கு முன்வராமல் இந்த மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் டிக்டொக் செய்து கடற்கரையோரத்தில் குளித்துக் கொண்டிருக்கின்றார். இதுவொரு கவலையான விடயம்.
மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்தவரையில் ஒரு ஏக்கரில் 50 தொடக்கம் 60மூடை வரையான நெல்லைப்பெற்றுக்கொள்ளும் நிலையுள்ளது.ஒரு விவசாயி 10 ஏக்கர் விவசாயம் செய்தால் 500மூடைகள் வரும். சிலவேளைகளில் அண்ணன்,தம்பிகள் இணைந்து 100 எக்கர் செய்தால்1000மூடை வரும்.
அரசியல் விலையினை அரசாங்கம் குறைக்கவேண்டுமானால் இலட்சக்கணக்கான நெல் மூடைகளை பதுக்கிவைத்துள்ள மில் உரிமையாளர்கள் இருக்கின்றார்கள்.அவர்களின் நெல்லை பறிமுதல்செய்யுங்கள்.அதனைவிடுத்து வருடக்கணக்காக படிப்படியாக முன்னேறிவந்த அப்பாவி விவசாயிகளின் நெல்லை பறிக்கீன்றீர்கள் என்றால் அது எந்த வகையில் நியாயம்.இந்த செயற்பாடு வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் ஒரு நடவடிக்கையாகவே நான் பார்க்கின்றேன்.
விவசாயிகள் சேமித்துவைத்துள்ள நெல்லை விற்பனைசெய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கப்போவதில்லை.அவர்கள் பரம்பரைபரம்பரையாக செய்துவந்த தொழில்.இந்த நாட்டில் அரசின் விலையினை தீர்மானிக்கும் செயற்பாடுகளை விவசாயிகள் செய்யவில்லை.
இந்த விவசாயிகள் தங்களது நெல்லை வைத்து வேறு தொழில்கள் செய்யலாம்.இந்த மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மாவட்ட விவசாயிகளை கேவலப்படுத்தும் வகையில் மாவட்டத்திற்குள் விதைநெல்லை உற்பத்திசெய்யமுடியாதா எனக்கேட்டவர்கள் இன்று விதைநெல்லுக்காக வைத்திருந்த நெல்லைக்கூட பறித்துக்கொண்டுசெல்கின்றார்கள் என்றால் இது எந்தவகையில் நியாயமானது.
இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் இலங்கைக்கான பணிப்பாளருடன் கதைத்தபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் அவ்வாறான பிரச்சினைகள் இருந்தால் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்துங்கள் நாங்கள் பொதுவான முடிவொன்றை எடுத்து நடைமுறைப்படுத்துவோம். இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்தித்து இது தொடர்பில் கூறியிருக்கின்றோம்.
தெற்கில் இலட்சக்கணக்கான மூடைகளை வைத்திருக்கும் பல நெல் ஆலைகள் அரசியல்வாதிகளிடம் உள்ளன. அதனையெல்லாம் விட்டுவிட்டு இங்குள்ள விவசாயிகளின் சீல்வைத்து எடுத்து அந்த நெல்லை இவ்வாறான அரசியல்வாதிகளின் நெல் ஆலைகளுக்குத்தான் குறைந்த விலையில் வழங்கப்போகின்றீர்கள் என்ற சந்தேகம் கூட எங்களிடம் உள்ளது.
உடனடியாக இந்த திட்டத்தினை நிறுத்தவேண்டும். எதிர்காலத்தில் அட்டைகளைக்கொடுத்தே அரசி போன்ற பொருட்களை வாங்கவேண்டிய நிலையேற்படும்.எங்கள் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நெல்லை பறித்து எடுத்தால் அவர்களும் அந்த அட்டையுடனேயே திரியவேண்டிய நிலைவரும் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.