ஆப்கானிஸ்தானில் தொழில்நுட்பப் பிரச்னைகள் தீர்க்கப்பட்ட பின் இடைக்கால அரசு நிறுவப்படும்’ என, தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றி, அங்கு ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (செப்., 6) தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்து உள்ளதாவது:
ஆப்கனில் போர் முடிவுக்கு வந்துவிட்டது. விரைவில் இடைக்கால அரசு அமையவுள்ளது. சரியான தேதியை என்னால் இப்போது கூற முடியாது. ஆனால், மிக விரைவில் புதிய அரசு அமையும். அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். தற்போதைய செயல்முறையின் சில தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதில் நாங்கள் மும்முரமாக இருக்கிறோம். துறைகளில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்த்த பின் இடைக்கால அரசு அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தலிபான் தலைவர்களில் ஒருவரான அனாமுல்லா சமங்கனி, ‘நாங்கள் முற்றிலும் சுதந்திரமான ஆப்கனில் வாழ்கிறோம். புதிய அரசுக்காக காத்திருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.