உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வரர்களின் இரகசிய பண கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இரகசிய சொத்துக்கள் தொடர்பிலான தகவல்கள் பாரிய நிதி ஆவணத்தினூடாக (PANDORA PAPERS) அம்பலமாகியுள்ள நிலையில், அதன் தாக்கம் இலங்கை நாடாளுமன்றத்திலும் நேற்று எதிரொலித்தது.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பிய ஆளுங்கட்சி எம்.பியான முஸம்மில்,
” நாடாளுமன்றத்தால் எதிரணி பிரதம கொறடாவுக்கு வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளது. மாதாந்தம் ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாவுக்கு எரிபொருள் பயன்படுத்தப்படுகின்றது. 2020 செப்டம்பர் மாதம் முதல் குறித்த வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி வாகனத்தை எதிரணி பிரதம கொறடா அல்ல, பிரிதொரு எம்.பியே பயன்படுத்துகின்றார். அவர்தான் கயந்த கருணாதிலக்க. இதற்கான உரிமை அவருக்கு இல்லை. எனவே, இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.” – என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல,
” கேட்பதற்கு எதுவும் இல்லாததால், காலைவேளையிலேயே இவ்வாறு சில்லறைத்தனமான விடயங்கள் பற்றி கேள்வி எழுப்புகின்றனர்.
ஆளுங்கட்சியினரின், உறவினர்களின் சொத்துகள் தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளன. (பண்டோரா பேப்பர்ஸ்) இது தொடர்பில் இவர்கள் கதைப்பதில்லை.
163 மில்லியன் அமெரிக்க டொலர், கள்ள கணக்குகளில் வைப்பிலிடப்பட்டு தற்போது தகவல் அம்பலமாகியுள்ளது. இது பற்றியும் கேள்வி எழுப்புங்கள்.” – என்றார்.