மீனவர் என்பதால் எத்தனையோ முள் வகையான மீன்களை சாப்பிட்டிருப்பார். அப்படிப்பட்ட மீனவர் புரோட்டா சாப்பிட்டபோது, புரோட்டா தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த பரிதாபம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. கேரள மாநிலத்தில் கொல்லம் மாவட்டம் ஓச்சிரா அருகே உள்ள தெற்கு கிளப்பினா வரவில் வசித்து வந்தவர் ஹரிஷ்(45). இவருக்கு ஸ்ரீலதா என்ற மனைவியும், ஹரிதா என்ற மகளும், ஹரிஜித் என்ற மகனும் உள்ளனர்.
மீனவரான ஹரீஸ் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு 9 மணிக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு அருகே இருக்கும் உணவகத்தில் இருந்து பரோட்டா வாங்கி வந்து சாப்பிட்டு இருக்கிறார். ஒரு பரோட்டாவை எடுத்து சாப்பிட தொடங்கியதுமே, அவருக்கு திடீரென மூச்சு அடைத்தது போல இருந்திருக்கிறது. சட்டென்று பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி விழுந்திருக்கிறார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை உடனே மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்து உள்ளனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் . இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாரிப்பள்ளி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்