உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3ஆம் தேதி விவசாயிகள் பேரணியின் போது மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பிரியங்கா காந்தி, ஏ.கே. அந்தோணி, மல்லிகார்ஜூன கார்கே, குலாம் நபி ஆசாத் மற்றும் கே.சி வேணுகோபால் ஆகியோர் இன்று காலை நேரில் சந்தித்தனர். அப்போது அவர்கள், லகிம்பூர் விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய மந்திரி பதவியில் இருந்து அஜய் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “லகிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரம் தொடர்பாக இன்றே மத்திய அரசுடன் கலந்துரையாடுவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “லகிம்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவை பதவியில் இருக்க நீக்க வேண்டும் என்றும், லகிம்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். அஜய் மிஸ்ராவை மத்திய மந்திரி பொறுப்பில் இருந்து நீக்காதவரை விசாரணை நியாயமாக நடக்க வாய்ப்பில்லை. சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் 2 பேர் லகிம்பூர் விவகாரத்தை விசாரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.