ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நவாசுதீன் சித்திக். இந்தி பட உலகில் முன்னணி வில்லன் மற்றும் குணசித்திர நடிகராக இருக்கிறார். சிறந்த நடிகருக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் திரைப்பட துறையில் இனவெறி இருப்பதாக நவாசுதீன் சித்திக் குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘இந்தி பட உலகில் நட்புறவுடன் பழகுவது இல்லை. இங்கு இனவெறிதான் அதிகம் உள்ளது. ஒரு நடிகை கருப்பாக இருந்தால் பட வாய்ப்பு அளிக்காமல் ஒதுக்குகிறார்கள்.
படம் நன்றாக வர திறமையானவர்களை நடிக்க வைக்கவேண்டும். ஆனால் இங்கு அந்த நிலைமை இல்லை. தோலின் நிறத்தை பார்க்கின்றனர். நான் உயரம் குறைவாக இருந்ததால் என்னையும் பல வருடங்களாக நிராகரித்தார்கள்.
ஆனால் நடிப்பு திறமையால் இப்போது எனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தி பட உலகில் நிலவும் இந்த இனவெறியை எதிர்த்து நான் பல வருடங்களாக போராடி வருகிறேன். பல பெரிய நடிகர்களும் இனவெறியால் பாதிக்கப்பட்டு உள்ளனர்” என்றார். இந்த குற்றச்சாட்டு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.