Home இந்தியா மாணவர்களை ஆசிரியர் தாக்கிய வீடியோ வைரல்

மாணவர்களை ஆசிரியர் தாக்கிய வீடியோ வைரல்

by Jey

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் செயல்பட்டு வருகிறது நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. நூற்றாண்டைக் கடந்து நிற்கும் இந்தப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்புவரை 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

நந்தனார் அரசு ஆண்கள் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் சிலர் வகுப்புகளுக்கு சரியாக செல்லாமல் வெளியே சுற்றுவதாக புகார் வந்தன.

இதைத்தொடர்ந்து மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் கண்காணித்தனர். அப்போது அந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் அம்மாபேட்டையை சேர்ந்த சஞ்சய் (வயது 17), அஜய்குமார், நெக்டா பாலன், சுசீந்திரன், சூர்யா, சந்துரு ஆகிய மாணவர்கள் ஒருசில வகுப்புகளை புறக்கணித்து வெளியே சுற்றுவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாணவர்களை பள்ளி இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் (55) நேற்று முன்தினம் அழைத்து கண்டித்தார்.

இதையடுத்து அந்த மாணவர்களை ஆசிரியர் சுப்பிரமணியன் முட்டி போட வைத்தார். மாணவன் சஞ்சையை, ஆசிரியர் சுப்பிரமணியன் பிரம்பால் சரமாரியாக தாக்கியும், காலால் எட்டியும் உதைத்தார். இதனை வகுப்பில் இருந்த மாணவர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்தனர். அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதை பார்த்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த வீடியோ காட்சியில் வகுப்பறையில் மாணவர்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்கின்றனர். வகுப்பறையின் நுழைவு வாயிலில் முட்டி போட்டிருக்கும் ஒரு மாணவரின் தலை முடியை பிடித்துக்கொண்டு முதுகில் பிரம்பைக் கொண்டு கொடூரமாகத் தாக்குகிறார் அந்த ஆசிரியர். வலி பொறுக்க முடியாமல் முட்டி போட்டபடியே துள்ளும் அந்த மாணவனை கோபம் அடங்காமல் காலால் எட்டி எட்டி உதைக்கிறார் ஆசிரியர். வகுப்பின் பின் வரிசையில் இருக்கும் மாணவர் ஒருவரால் மொபைல் போனில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் மாணவன் சஞ்சய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 294(பி), 323, 324, பொது இடத்தில் திட்டுதல், வன்மமாக பேசுதல், 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவனை தாக்குதல், எஸ்.சி.எஸ்.டி. பிரிவின் கீழ் ஆகிய வழக்குகள் உள்பட மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து ஆசிரியர் சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிதம்பரம் கிளைசிறையில் அடைத்தனர். மாணவர்களை ஆசிரியர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஆசிரியர் சுப்பிரமணியனை சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
யவர் ஆர்யன் கான் – அரசு தரப்பு

 

 

related posts