Home இந்தியா சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

by Jey

மத்திய அரசு சமையல் எண்ணெய்களின் விலைகளை கட்டுப்படுத்துவதற்காக சமீபத்தில் சமையல் எண்ணெய் இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. ஆனாலும் இறக்குமதியாளர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் பல்வேறு விலக்குகளையும் அறிவித்தது.

இதனால் உள்ளூர் சமையல் எண்ணெய் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும் என உள்ளூர் சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் புகார் கூறும் நிலைதொடர்கிறது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய வருவாய் துறை, கச்சா சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை குறைத்து உள்ளது. 9.25 சதவீதம் முதல் 16.5 சதவீதம் வரை இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 3½ மாதங்களில் இதுவரை 3 முறை கச்சா சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் மத்திய அரசு எதிர்பார்த்த அளவிற்கு சமையல் எண்ணெய்களில் விலையை கட்டுப்படுத்தப்படவில்லை.

பாமாயில் மற்றும் சோயாபீன் சமையல் எண்ணெய் இறக்குமதி வரி 32.5 சதவீதத்தில் இருந்து 17.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இவற்றிற்கான செஸ் கட்டணமும் 20 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த இறக்குமதி வரி குறைப்பு வருகிற மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடைசியாக கடந்த செப்டம்பர் 11-ந் தேதி சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் இறக்குமதி வரி குறைப்பு நடவடிக்கை உள்ளூர் சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலையை கட்டுப்படுத்த எந்த வகையிலும் பலன் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுபற்றி எண்ணெய் வணிக வட்டாரங்கள் கூறுகையில், கடந்த ஜூலை மாதம் சில்லறை வணிக சமையல் எண்ணெய் பணவீக்கம் 27-83 சதவீதமாக இருந்த நிலையில் ஆகஸ்டு மாதம் 32.19 சதவீதமாக உயர்ந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 34.5 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. இதிலிருந்தே கடந்த 3 மாதங்களாக சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசின் நடவடிக்கைகள் எந்த வகையிலும் பலன் அளிக்கவில்லை என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

related posts