வாட்டிகன் நகரில் போப் ஆண்டவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின்போது, 10 வயது சிறுவன் ஒருவன் மேடையில் ஏறி போப் ஆண்டவரின் அருகில் சென்றான்.
இருக்கையில் அமர்ந்திருந்த போப் ஆண்டவர் சிறுவனிடம் அன்பாகப் பேசினார். அப்போது அவரது கைகளை பிடித்துக்கொண்டு அந்த சிறுவன் துள்ளிக் குதித்து விளையாடியதை கண்டு பார்வையாளர்கள் திகைத்துப்போயினர். பின்னர், மீண்டும் போப் ஆண்டவரின் அருகே சென்ற சிறுவன், ஒரு கட்டத்தில், அவர் அணிந்திருக்கும் வெள்ளை தொப்பியை கொடுக்கச்சொல்லி அடம்பிடித்தான்.
சிறுவனின் இந்த செய்கையை கவனித்த, நிகழ்ச்சியின் தலைவர், சிறுவனை சமாதானப்படுத்தி தனது இருக்கையில் அமரவைத்தார்.அதன்பிறகும் வேகம் குறையாத அந்த சிறுவன், மற்றொருவரை கையை பிடித்து அழைத்து வந்து போப் ஆண்டவரிடம் தொப்பியை வாங்கித் தருமாறு கேட்டதால் அரங்கில் சிரிப்பலை எழுந்தது.
இறுதியாக, என்ன செய்தாலும் இந்தச் சிறுவனை சமாதானம் செய்ய முடியாது என புரிந்துக்கொண்ட போப் ஆண்டவர், தனது தொப்பியை கொடுத்ததால், சிறுவனின் ஆசை நிறைவேறியது.
போப் ஆண்டவரின் தொப்பியை அணிந்துகொண்டு, மகிழ்ச்சியுடன் மேடையில் இருந்து இறங்கிய சிறுவனை அனைவரும் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். சிறுவனின் இந்த குறும்புத்தனங்கள் எதையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ, போப் ஆண்டவரின் பாதுகாவலர்களோ,தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய போப் ஆண்டவர், அந்த சிறுவன் தன் மனதில் இருந்த உணர்வுகளை எந்த கட்டுப்பாடுகளுமின்றி வெளிப்படுத்தியுள்ளார் எனவும், அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது.