நாளை டெல்லியில் நடைபெறும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. இந்த சூழலில் சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது வாங்குவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் விருது பெறும் இந்த தருணத்தில் கே.பாலசந்தர் இல்லையே என்பது வருத்தமாக உள்ளது. விருது வாங்குவேன் என எதிர்பார்க்கவில்லை. விருது வாங்கிய பிறகு மீண்டும் உங்களை சந்திக்கிறேன்” என்று ரஜினிகாந்த் கூறினார்.
இந்நிலையில் நாளை தனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் இருக்கிறது. ஒன்று மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு எனக்கு வழங்க உள்ளது.
இரண்டாவது என்னுடைய மகள் சவுந்தர்யா விசாகன், அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய ‘HOOTE’ என்கின்ற செயலியை உருவாக்கி அதை அறிமுகப்படுத்தவுள்ளார். அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களையும், விஷயங்களையும் இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் ‘HOOTE APP’ மூலமாக பதிவிடலாம். இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான ‘HOOTE APP’-ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன்” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.