Home இந்தியா ‘நாங்க போட்டுக்கொண்டோம், நீங்க போட்டுக் கொண்டீர்களா?

‘நாங்க போட்டுக்கொண்டோம், நீங்க போட்டுக் கொண்டீர்களா?

by Jey

புதுச்சேரி மாநிலத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்ட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதுச்சேரியில் தற்போது மெகா தடுப்பூசி முகாம் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று கவர்னர் மாளிகையில் நடந்தது. கூட்டத்துக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி, ‘நாங்க போட்டுக்கொண்டோம், நீங்க போட்டுக் கொண்டீர்களா’ என்ற கொரோனா விழிப்புணர்வு காணொலியை வெளியிட்டார். கூட்டத்தில் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, சுகாதாரத்துறை செயலர் அருண், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நிருபர்கள் சந்திப்பில் பேசிய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், “இந்தியா பாதுகாப்பான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் இதுவரை 102 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது. நாம் பாதுகாப்பாக இருப்பதற்கு தடுப்பூசி செலுத்தியதே காரணம். புதுச்சேரியில் 75 சதவீதத்தை தாண்டி 80 சதவீதம் நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். விடுபட்டுள்ள சுமார் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான அணுகுமுறையை திட்டமிட்டு வருகிறோம்.

மாநிலம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. இந்த முகாமில் ஏறக்குறைய 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவது என திட்டமிட்டு இருக்கிறோம். சுகாதாரத்துறையுடன் பிற அரசுத் துறைகள், தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைவரும் இணைந்து பணியாற்ற இருக்கிறோம். மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நவம்பர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆசிரியர்கள் ஏறக்குறைய 90 சதவீதம் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக சமூக இடைவெளி கடைபிடித்தல், முக கவசம் அணிதல், ஒரு நாள் இடைவெளியில் பள்ளிக்கு வருதல் போன்ற நடைமுறைகளை பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்து வருகிறது.

2 முதல் 8 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஆய்வை பாரத் பயோடெக் நிறுவனம் முடித்து அதற்கான அனுமதியை பெற முயற்சி நடைபெற்று வருகிறது. இது மிகப்பெரிய சாதனை. கொரோனா சொட்டு மருந்தும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது அறிமுகப்படுத்தப்பட்டால் மிகப்பெரிய புரட்சியாக இருக்கும். குழந்தைகள் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். புதுச்சேரியில் கொரோனா பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

related posts