விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதாக வாக்குறுதி அளித்த பாஜக, அதற்கு பதிலாக நாட்டின் பணவீக்கத்தை இரண்டு மடங்கு ஆக்கிவிட்டதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
லக்னோவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அகிலேஷ் யாதவ் மேலும் கூறுகையில்“ பாரதீய ஜனதாவின் தாமரை பொய் மற்றும் வஞ்சகம் என்ற நிலத்தில் வளர்கிறது. பாஜக தனது தேர்தல் அறிக்கையை மறந்துவிட்டது. விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலையை பெற முடியவில்லை.
லகிம்பூரில் தங்கள் விளைபொருட்களை விவசாயிகள் எரிக்கின்றனர். தங்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்குமா? என விவசாயிகள் அறிய முற்படுகின்றனர். ஆனால், அவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து யாருமே பதிலளிக்கவில்லை” என்றார்.