உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த போது, சீன அரசு மேற்கொண்ட தீவிரமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் அங்கு கொரோனா கட்டுக்குள் வந்தது.
இதற்கிடையில் சமீப காலமாக சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. அவற்றில் பெரும்பான்மையான தொற்று பாதிப்புகள் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் மூலமாக பரவியதாகவும், மேலும் பல தொற்றுகள் அறிகுறி இல்லாத பாதிப்புகளாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது சீனாவில் ஹச்5என்6 (H5N6) எனப்படும் பறவை காய்ச்சல் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 3 பேருக்கு இந்த பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் 52 வயது நபர் ஒருவருக்கும், ஹூனான் மாகாணத்தில் 66 வயது நபர் ஒருவருக்கும், அதே மாகாணத்தைச் சேர்ந்த 58 வயது பெண் ஒருவருக்கும் என 3 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலக சுகாதார மையத்தின் அறிக்கைப்படி, பறவைக் காய்ச்சல் அனைத்து வயதினருக்கும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த காய்ச்சலானது நேரடியாக ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என மருத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.