ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் பிரதிநிதி ஒருவர் அவசியம் என்பதை தாம் ஏற்றுக் கொள்வதாக அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இந்தச் செயலணி தொடர்பில் தொலைகாணொளி ஊடாக இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய அரசியல் தரப்பினர் தங்களுக்கான வாக்குகள் குறித்தே கவனம் செலுத்துகின்றனர்.
வடக்கு, கிழக்கில் மத ரீதியான பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனினும், தெற்குடனான மத பிரச்சினை குறித்து கருத்துரைக்கின்றனர்.
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தாம் நன்கு அறிந்துள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் ஆரம்பத்திலேயே அதில் உள்ள குறைபாடுகளைக் கூறி பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் முதலில் அதன் திட்டங்களை வகுப்பது முக்கியமானதாகும் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நாட்டில் சிறுபான்மை என்று ஒரு இனம் இல்லை என்றும் அவர் கூறினார்.
நாட்டில் இலங்கையர்கள் என்ற இனம் மாத்திரமே இருப்பதாகவும், இன ரீதியாக யாரையும் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.