எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி நடந்தது.
நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதாக கூறப்பட்டது. இதில் தமிழகத்தை பொறுத்தவரையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வை சந்தித்ததாக தகவல்கள் தெரிவித்தன.
நீட் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டதாகவும், தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றார்கள் என்ற விவரத்தை மட்டும் அந்தந்த மாணவர்களுக்கு, அவர்கள் விண்ணப்பித்த போது வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
‘நீட்’ தேர்வு முடிவு வெளியாகிய உடன் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பப்பதிவு குறித்த தகவல்கள் வெளியிடப்படும். அந்தவகையில் தற்போது தேர்வு முடிவு வெளியாகிய நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது குறித்த விவரங்களை இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மிரினல் குட்டேரி, டெல்லியை சேர்ந்த தன்மை குப்தா, மராட்டியத்தை சேர்ந்த கார்த்திகா நாயர் ஆகியோர் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்திருக்கின்றனர். இதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும் முதலிடத்தை பிடித்தவர்களின் பட்டியலில், தமிழகத்தில் கீதாஞ்சலி என்ற மாணவி 720-க்கு 710 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பெற்றிருக்கிறார். அகில இந்திய அளவில் மாணவிகள் பிரிவில் முதல் 20 இடத்தில் கீதாஞ்சலி 6-வது இடத்தை பெற்றிருக்கிறார்.
நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் எம்.பிரவீன், நாமக்கல் தும்மங்குறிச்சியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஏ.கீதாஞ்சலி ஆகியோர் 710 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடத்தையும், சேலத்தைச் சேர்ந்த மாணவி அர்ஜிதா 705 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
அகில இந்திய அளவில் கீதாஞ்சலி 23-வது இடத்தையும், பிரவீன் 30-வது இடத்தையும், அர்ஜிதா 60-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இவர்கள் நாமக்கல் போதுப்பட்டியில் உள்ள பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக ஓராண்டுகளாக தொடர்ந்து பயிற்சி பெற்று இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.