சிரியா, ஈராக் போன்ற மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐரோப்பிய நாடான பெலாரசில் வசித்து வருகின்றனர். இதற்கிடையில், பெலாரசில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் போலாந்து நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்து வருகின்றனர்.
இதற்காக, ஆயிரக்கணக்கான அகதிகள் பெலாரஸ் – போலாந்து எல்லையில் குவிந்து வருகின்றனர். இந்த அகதிகளை தடுக்கும் முயற்சியில் போலாந்து பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் நிலைத்தன்மையை சீர்குலைக்க பெலாரஸ் மற்றும் ரஷியா முயற்சி செய்வதாக ஐரோப்பிய யூனியன் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், இந்த குற்றஞ்சாட்டை பெலாரஸ் மற்றும் ரஷியா மறுத்துள்ளது.
இந்நிலையில், பெலாரஸ் நாட்டின் எல்லையில் இருந்து சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான அகதிகள் இன்று போலாந்துக்குள் நுழைய முயற்சித்தனர்.
அப்போது, போலாந்து எல்லைப்பாதுகாப்பு படையினருக்கும், அகதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது அகதிகள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் போலாந்து எல்லைப்பாதுகாப்பு படை வீராங்கனை படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த வீராங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பெலாரசில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் போலாந்து நாட்டின் எல்லை நோக்கி வருவதால் அவர்களை தடுக்கும் நடவடிக்கையில் போலாந்து பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
போலாந்துக்கு உதவியாக அமெரிக்கா நேட்டோ அமைப்பு களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அகதிகள் விவகாரம் அமெரிக்கா – ரஷியா இடையே மோதலை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.