தென் கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லேஹீத் (Bexleyheath) பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீப்பரவலில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
நிரூபா என்ற பெண்ணும் அவரது தாயாரும் ஒரு வயது பெண் குழந்தையான ஷஸ்னா மற்றும் 4 வயது ஆண் குழந்தையான தபீஷ் ஆகியோரே இந்தச் சம்பவத்தில் பலியானதாக அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 அளவில் ‘தமது வீட்டில் தீப்பரவி இருப்பதாக’ நிரூபா தொலைபேசி அழைப்பை எடுத்து அவரது கணவரான யோகன் தங்கவடிவேலுக்கு தெரிவித்துள்ளார்.
எனினும் அவரது தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்குப் பிரவேசித்து தீயை அணைத்து வீட்டுக்குள் நுழைந்து அவர்களை மீட்க முயற்சித்தபோதும் அவர்கள் ஏற்கனவே இறந்து இருந்தமை தெரியவந்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்பே அவர்கள்குறித்த கட்டடத்துக்குக் குடி பெயர்ந்துள்ளனர்.
அந்தக் கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த தீயை எச்சரிக்கும் கருவி தொழிற்படாமையே இந்த அனர்த்தத்திற்கு காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம் சம்பவத்தின்போது குறித்த கட்டடத்திலிருந்து குதித்து உயிர் தப்பிய நிரூபாவின் மைத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.