கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று வாரசந்தை நடப்பது வழக்கம். இன்று காலையும் வழக்கம்போல் ஆட்டு சந்தை தொடங்கியது.
இதற்காக உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், மங்கலம்பேட்டை, எலவனாசூர்கோட்டை, ஆசனூர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் விற்பனைக்காக ஆடுகளை கொண்டு வந்திருந்தனர்.
தொடர் கனமழை காரணமாக ஆடுகளை கோமாரி நோய் தாக்கி வந்த நிலையில் இன்று வழக்கத்தை விட அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்காக வந்திருந்தன. உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் விழாக் காலங்களில் ரூபாய் 2 கோடி முதல் 5 கோடி வரையில் ஆடுகளின் விற்பனை நடப்பது வழக்கம்.
எனினும், விழாக்காலங்களில் வரும் ஆடுகளை விட இன்று அதிக அளவு ஆடுகள் வந்திருந்த நிலையில் ஆடுகளை நோய்கள் தாக்கி வந்ததால் ஆடுகளின் விலை குறைவாகவே இருந்தது. ரூபாய் 10 ஆயிரத்திற்கு விற்க வேண்டிய ஆடுகள் ரூபாய் 4000 முதல் 6000 வரையிலேயே விற்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக சந்தைக்கு வந்திருந்த நிலையில் அதில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் சந்தையிலேயே அடுத்தடுத்து உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகளும் விவசாயிகளும் கவலை அடைந்தனர்.
சந்தையிலேயே ஆடுகள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் ஆடு விற்பனை மந்தமாகவே நடைபெற்றது. இதனால் ஏராளமான விவசாயிகள் கொண்டு வந்திருந்த தங்கள் ஆடுகளை விற்பனை செய்ய முடியாமல் மீண்டும் வீட்டிற்கே கொண்டு சென்றனர்