பிரேசில் நாட்டில் 12 வயது கடந்தவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்தி கொள்ள அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில், அந்நாட்டில் பிறந்த 2 மாத பெண் குழந்தை மற்றும் 4 மாத ஆண் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியான பைசர் செலுத்தப்பட்டு உள்ளது.
அவர்களுக்கு டிப்தீரியா, டெட்டனஸ், பெர்டூசிஸ் மற்றும் ஹெபடைடிஸ் பி ஆகியவற்றுக்கு எதிராக, நோயெதிர்ப்பு சக்தியை வழங்க கூடிய தடுப்பூசியை வழங்க வேண்டும். ஆனால், தவறுதலாக செவிலியர் குழந்தைகள் இருவருக்கும் பைசர் தடுப்பூசியை செலுத்தி உள்ளார்.
இதனால், இரு குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.