ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு – காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் காஷ்மிரில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறித்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு எழுத்தப்பூர்வமாக மத்திய உள்துறை இணை – மந்திரி நித்யானந்த் ராவ் பதில் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் 336 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினர் 81 பேர் வீர மரணமடைந்துள்ளனர். பொதுமக்கள் 96 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின்னர் காஷ்மீரி இந்துக்கள் \ பண்டிட்கள் யாரும் காஷ்மீரில் இருந்து வெளியேறவில்லை. ஆனால், சமீப காலத்தில் காஷ்மீரி பண்டிட் குடும்பத்தினர் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் காஷ்மீரில் இருந்து ஜம்முவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த குடும்பங்கள் அரசு பணியாளர்கள் ஆவர். அரசுப்பணிக்காகவும், கல்வி நிறுவனங்களில் குளிர்கால விடுமுறை காரணமாகவே பெரும்பாலானோர் ஜம்முவுக்கு சென்றுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.