தமிழ் படம் எடுக்கனுமா! டாப் ஹீரோவை கூப்டு. பம்பாய் ஹீரோயினை கூப்டு. ஒரு நல்ல காமெடி நடிகரை வெச்சு படத்துக்கு சம்மந்தமே இல்லாம ட்ராக் ரெடி பண்ணு. மியூஸிக் டைரக்டர் கிட்ட சிச்சுவேஷனே இல்லாம 5 பாட்டு வாங்கிக்க. அதுல 3 ஃபாரீன் லொக்கேஷன் போயிடனும். ஹீரோவுக்கு மார்கெட்ல ஒரு ஃபைட், மெட்ரோ டிரைன்ல ஒரு ஃபைட்.’ இப்படி இருக்கக் கூடிய எல்லா ஸ்டீரியோடைப்பையுமே உடைத்து வெளிவந்திருக்கிறது ஆண்டி இந்தியன் திரைப்படம்.
பிரபல இணைய திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் ஒவ்வொரு படத்தை விமர்சனம் செய்யும்போதும் திரையுலகினரும் ரசிகர்களும் திரண்டு வந்து ஒரு திரைப்படம் எடுக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அதை நீ செஞ்சு பார்த்தாதான் தெரியும் என மிரட்டல் பாடம் எடுத்தார்கள். அஞ்சாத மாறன் வேட்டியை மடித்துக் கொண்டு நானே படம் இயக்குகிறேன் என்று கிளம்பி உருவாக்கியிருக்கும் படம்தான் ஆன்டி இண்டியன்.
இவனுக்கு என்ன தெரியும்? என்ன பெருசா படம் எடுத்துட போறான் என்று பேசியவர்கள் முகத்தில் கரியை பூசியிருக்கிறார் மாறன். டெம்ப்ளேட் திரைக்கதையில் சிக்காமல் புதிய பாணியில் திரைக்கதை அமைத்து சமூகத்தில் பேசப்பட வேண்டிய சிக்கலான விஷயத்தை தைரியமாக கையில் எடுத்து பேசியதற்காகவே மாறன் பாராட்டப்பட வேண்டியவர்.
திரைப்படத்தின் ஆரம்ப காட்சியிலேயே ஒருவர் கொலை செய்யப்படுகிறார். ஏதோ துப்பறியும் கதை என்று நினைத்தால் இறுதி வரை அவரை கொலை செய்தது யார் என்று கண்டுபிடிக்கவே இல்லை. அது நமக்கு தேவையும் இல்லை. ஆனால் அந்த பிணத்தை வைத்து ஒவ்வொரு மத தலைவர்களும் செய்யும் வியாபார வேலைகள், அரசியலுக்காக கட்சிக் காரர்களுடன் சேர்ந்து கொண்டு போலீஸ் செய்யும் பித்தலாட்ட வேலைகள் என அனைத்து தரப்பினரையும் பிரித்து மேய்ந்திருக்கிறது ஆன்டி இண்டியன் திரைப்படம்.
பெரிய தொழில்நுட்ப குழு இல்லை, பெரிய பெரிய நடிகர் நடிகைகள் இல்லை, பெரிய லொகேஷன் இல்லை. ஆனால் ஆழமான ஒரு கதையை மிக நேர்த்தியான திரைக்கதை மூலம் படமாக்கினால் மற்ற ஏதுமே இல்லாமல் சிறந்த படத்தை கொடுக்க முடியும் என முன்னுதாரணமாக வந்திருக்கிறார் இளமாறன்.
இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் இந்த மூன்றில் எந்த மதத்தினர் பித்தலாட்டம் செய்கின்றனர் என்று கேட்டால், மதத்தை தூக்கி சுமக்கும் எல்லோருமே பித்தலாட்டம் செய்பவர்கள்தான் என்ற கருத்தோடு களம் இறங்கியிருக்கும் ஆண்டி இந்தியன் திரைப்படம் சந்தித்த சவால்கள் கொஞ்சம் இல்லை. வெளியிட முடியாது என சென்சார் போர்டால் நிராகரிக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் படிகளில் ஏறி இறங்கி படக்குழு இப்போது இப்படத்தை டிசம்பர் 10ஆம் தேதி திரைக்கு கொண்டு வருகிறார்கள்.
சமூக வெளியில் நாம் பார்க்கும் மத மோதல்களுக்கும், கலவரங்களுக்கும் வித்து எங்கிருந்து தொடங்குகிறது, அதனை மிக எளிமையாக தடுக்க முடிந்தும் தடுக்க யாருமே முயற்சி எடுக்காதது ஏன்? அரசாங்கமும், அதிகாரமும் மத மோதல்களை எப்படி தங்களின் சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறது என்ற விஷயங்களை பட்டியலிட்டுக் காட்டியிருக்கும் ஆன்டி இண்டியன், நிச்சயமாக கண்டு களிக்க வேண்