சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில் அதன் எல்லையில் ரஷ்யா தன் படைகளை நிறுத்தி வைத்துள்ள நிலையில், பதற்றத்தை தணிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். ஆனால், அதில் தீர்வு ஏதும் ஏற்படாததால், உக்ரைனில் பதற்ற நிலை நீடிக்கிறது.
உக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் மிக ப்பெரிய நாடு. உக்ரைனின் கிரீமியா பகுதியை ஏற்கனவே அண்டை நாடான ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடான உக்ரைனை முழுமையாக கைப்பற்ற முயற்சித்து வருகிறது. உக்ரைன் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை ரஷ்யா (Russia) குவித்து வருகிறது.
ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கினால், ரஷ்யா ‘முன் எப்போதும் இல்லாத வகையில்’ பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஜோ பைடன் (Joe Biden) கூறினார்.
உக்ரேனுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வலுவாக எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும், ரஷ்யாவை எதிர்கொள்ள உதவுவதற்காக அமெரிக்க வீரர்களை உக்ரைனுக்கு அனுப்புவது குறித்த திட்டம் ஏதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸும் (France) இந்த பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைபாட்டை ஆதரித்ததுள்ளது. புதிய ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸும் ( Olaf Scholz), அத்தகைய தாக்குதல் நடந்தால், ஜெர்மனிக்கு இயற்கை எரிவாயு வழங்கும் ரஷ்ய திட்டமான Nord Stream 2 பைப்லைன் திட்டத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து புடினுக்கு (Vladimir Putin) எச்சரிக்கை விடுத்தார்.
எனினும், தற்காப்பு நடவடிக்கையாகவே எல்லையில் படைகள் நிறுத்தப்பட்டுள்ளது எனவும், உக்ரைனை தாக்குவதற்காக அல்ல என்றும் ரஷ்யா கூறியுள்ளது. “ரஷ்யா வெளியுறவுக் கொள்கையில் அமைதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றாலும், தன்னை பாதுகாக்கும் உரிமையும் நாட்டிற்கு உள்ளது” என்று விளாடிமிர் புடின் கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் (Kyriakos Mitsotakis) உடனான பத்திர்க்கையாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார். இருப்பினும் ‘நேட்டோ’ அமைப்பில் உக்ரைன் இணைந்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ரஷ்யா மிரட்டல் விடுக்கும் வகையில் எல்லையில் படைகளை குவித்து வருவதாக கூறப்படுகிறது.